×

தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக பிரமாண்ட வரவேற்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, நவ. 9: வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா  தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க தூத்துக்குடிக்கு வருகை தரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி  பழனிசாமிக்கு வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை மறுதினம் தூத்துக்குடிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,

முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். முன்னதாக நாளை (10ம் தேதி) காலை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கும் முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் எங்கள் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள் (11ம் தேதி) தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதரும் முதல்வருக்கு காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட எல்கையான வல்லநாட்டிலும், பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகைதரும் முதல்வருக்கு 3வது மைல் பைபாஸ் மேம்பாலம், தூத்துக்குடி தெற்கு காவல்நிலையம் முன்பும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகைதரும் முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிலும் இரு மாவட்ட கழகங்களின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு  பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். குறிப்பாக நம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தும், புதிய திட்டங்களை துவங்கி வைத்தும் பெருமை சேர்க்கும் முதல்வரை சிறப்பாக வரவேற்க அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : AIADMK ,Kadampur Raju ,Chief Minister ,Edappadi ,Thoothukudi North and South ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...