×

குறுக்கலாகவும், மேடு பள்ளங்களாகவும் உள்ள காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்கம் எப்போது?... பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை 37 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இச்சாலை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலை அகலமாக இல்லை. இதனால், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். சில உயிரிழப்பு சம்பவங்களும் நடந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டாலும், பல்வேறு அலுவலகப் பணிகளுக்காக ஏராளமான ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து ஒரகடம் தொழிற்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாலாஜாபாத் வரை செல்வதற்கு, இந்த சாலை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

முத்தியால்பேட்டை, தாங்கி, வாலாஜாபாத், பழையசீவரம், திருமுக்கூடல் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், தங்களது அத்தியாவசிய தேவையான மருத்துவம், அலுவலக பணி ஆகியவற்றுக்கு பைக்கில் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேற்கண்ட சாலை குறுக்கலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் எதிரே வாகனம் வரும்போது சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களில் பைக் ஏறி, இறங்கி செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் வாலாஜாபாத் மார்க்கெட்டில் சாலை மிகக் குறுகலாக உள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியை கடக்க சுமார் அரைமணி நேரம் ஆவதாக பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என விரக்தியுடன் கூறுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road widening ,Kanchipuram-Chengalpattu ,
× RELATED காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.17 லட்சம் பேர் பயன்