×

எதிரே வரும் வாகனங்களுக்கு வழி இல்லாத வகையில் ஒருவழி பாதையாக அமைந்துள்ள படப்பை - ஒரத்தூர் சாலை

* அகலப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
* கண்டு கொள்ளாத அதிகாரிகள்


பெரும்புதூர்: எதிரே வரும் வாகனங்களுக்கு வழி இல்லாத வகையில், ஒருவழி பாதையாக அமைந்துள்ள படப்பை - ஒரத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனால், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒரத்தூர், காவனூர், சிறுவஞ்சூர், திருத்தவேலி, நாட்டரசன்பட்டு, மாடம்பாக்கம், வரதராஜபுரம், சட்டமங்கலம், ஏரிவாக்கம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், வங்கி, பள்ளி, கல்லூரி, சார்பதிவாளர் அலுவலகம், மணிமங்கலம் காவல் நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்களுக்கு செல்ல படப்பை - ஒரத்தூர், ஒரத்தூர் - நீலமங்கலம் சாலையை பயன்படுத்துகின்றனர்.

படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேற்கண்ட 2 சாலைகளிலும், தரைப்பாலங்கள் பழுதடைந்து காணப்பட்டன. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அந்த பாலங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும், வரும் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்பாக்கம், ஒரத்தூர் ஆகிய ஏரிகளை இணைத்து ₹62 கோடியில் 0.75 டிஎம்சி தண்ணீர் சேமிக்க புதிய நீர்த்தேக்கம் அமைக்கும்  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை பணிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிகமாக சுமை ஏற்றி இந்த சாலை வழியாக செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ஒரு கனரக வாகனம் செல்லும்போது, எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழி இல்லை. இதனால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி,  இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கற்பகம் சுந்தர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், குன்றத்தூர் தாலுகா அலுவலகம் என அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டனர். அதேபோல், ஜமாபந்தி நிகழ்ச்சியிலும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தன போக்கில் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : street ,Padappai - Orathur ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...