×

முத்தையாபுரத்தில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

ஸ்பிக்நகர், நவ. 6:  முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் பகுதியில் பெய்த மழைநீர் கழிவுநீருடன் தேங்கிநிற்பதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை தவாக மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டலம், 52வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 3வது தெருவில் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் கழிவுநீருடன் கலந்து செல்ல வழியின்றி தெருவில் தேங்கிநிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக கழிவுநீரை அகற்றவும், முறையாக வாறுகால் வசதி செய்துதரவும், கிருஷ்ணாநகர் 3வது தெருவில் புதிய சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.  

இதில் தவாக மாவட்ட துணைச்செயலாளர் சண்முகசுந்தரம்,  துணைத்தலைவர் அந்தோனிசாமி, கிருஷ்ணாநகர் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து விரைந்துவந்த மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, முத்தையாபுரம் எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச்சென்றனர்.

Tags : Zonal Corporation Zonal Office ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்