பிடிபட்ட கொலை குற்றவாளியை கோட்டை விட்ட போலீசார் மரக்காணத்தில் தப்பி ஓட்டமா?

புதுச்சேரி, நவ. 6:  புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் கடந்த செப்.14ம் தேதி ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த அய்யப்பன் (45) என்பதும், குடும்பத்தை பிரிந்து புதுச்சேரி வந்த இவர், மரக்காணத்தைச் சேர்ந்த கொய்யா பழ வியாபாரியான செல்வியிடம் ரூ.10 ஆயிரம் கடனுக்கு பழங்களை வாங்கி விற்றதும் தெரியவந்தது. ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் அய்யப்பன் டிமிக்கி கொடுத்த நிலையில், செல்வி அவரை தேடி வந்தார். இதனிடையே சம்பவத்தன்று சேதராப்பட்டு சாராயக்கடை பகுதியில் நின்றிருந்த அய்யப்பனை இவ்விவகாரம் தொடர்பாக செல்வியின் கணவர் பழனி (55), அரியாங்குப்பம் அரசு (40), வேன் டிரைவர் லாஸ்பேட்டை முத்து (42) ஆகியோர் சரமாரி தாக்கி, கரும்பு மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்து ஆம்பூர் சாலையில் வீசியது தெரியவந்தது.

 இதில் செல்வி உள்ளிட்ட 4 பேரையும் உடனே பிடித்த போலீசார், அவர்களை கோவிட் பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் செல்விக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கோவிட் சிகிச்சை முடிந்து ஜிப்மரில் இருந்து வெளியே வந்த செல்வி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் அவரை சிறையில் அடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் கொலை நடந்து 50 நாட்களாகியும் செல்வியை சிறையில் அடைக்காமல் போலீசார் தற்போதுவரை அலட்சியமாக உள்ளனர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.  பிடிபட்ட கொலை வழக்கு பெண் குற்றவாளியை சேதராப்பட்டு போலீசார் சிறையில் அடைக்காமல் கோட்டை விட்டுவிட்டதாக புகார்கள் குவிந்துள்ளன.

Related Stories:

>