×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடம் திமுக அமைப்பாளர்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு மாநில பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தல்

புதுச்சேரி,  நவ. 6:  புதுச்சேரி அரசியல்  நிலவரம், சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து திமுக அமைப்பாளர்கள் சிவா, எஸ்பி சிவக்குமார், நாஜிம் ஆகியோர் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர்.  
தொடர்ந்து வரும்  17ம்தேதி  மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 72  பேரிடம் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இந்நிலையில் புதுச்சேரி  மாநில திமுக அமைப்பாளர்கள் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், புதுச்சேரியில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 11 மாத சம்பளம் வழங்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.  ஏஎப்டி, சுதேசி,  பாரதி மில்லில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி,  கிராஜுவிட்டி உடனடியாக வழங்க வேண்டும்.  

பாப்ஸ்கோ, பாசிக்,  அமுதசுரபி, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு  அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக உள்ள  நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கொண்டு வரப்பட்ட குப்பை  வரி, பாதாள சாக்கடை  இணைப்புக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற  உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ஒதுக்கித்தர வேண்டும். தனியாரிடம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, உடனே  மூடப்பட்டுள்ள அந்த ஆலையை திறந்து இயக்க வேண்டும்.
புதுவையில் உடனடியாக  காவலர் தேர்வை நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து, மக்களுக்கு  இலவச அரிசியை நேரடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கான நிலுவை  சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொண்டனர். சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

பின்னர் வெளியே வந்த தெற்கு பகுதி அமைப்பாளர் சிவா கூறுகையில், இரண்டரை ஆண்டுகளாக முதல்வர் கவர்னரை சந்திக்கவில்லை. அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பள பாக்கி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கிறது.  எனவே மக்களுக்காக  கவர்னரை திமுக சந்திக்கவில்லை என்ற கேள்வி எழக்கூடாது. ஜனநாயகத்தில் கவர்னரை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை. மக்கள் பிரச்னைகளை கவர்னரிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். இதேபோன்றுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், பாலன் ஆகியோரும் கடந்த காலங்களில் சந்தித்துள்ளனர். ஆளும் அரசுடனான கூட்டணிக்கும்,  கவர்னரை சந்திப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்றார்.

Tags : organizers ,government school students ,meeting ,DMK ,governor ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு