×

பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த நெல் வயல் வரப்புகளில் உளுந்து, சூரியகாந்தி சாகுபடி

நாகர்கோவில், நவ.6: நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வயல் வரப்புகளில் உளுந்து மற்றும் சூரியகாந்தியை சாகுபடி செய்ய அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.  கும்பப்பூ பருவத்தில் மப்பும் மந்தாரமுமான கால சூழ்நிலையில் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் காணப்படும். குறிப்பாக இலைமடக்குப்புழு, குருத்துப்புழு, தாக்குதல் ஏற்பட்டு பயிர் பாதிப்பு ஏற்படுவதால் நெல் வரப்பில் உளுந்து, சூரியகாந்தி பயிர் சாகுபடி மேற்கொண்டால் நன்மை தரும் பூச்சிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் மேற்கொண்டு தீமை தரும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் புழு பருவத்தை அழித்து பூச்சிக்கொல்லி தெளிப்பதை குறைப்பதற்கு வழி செய்கின்றன. குறிப்பாக நன்மை தரும் பொறி வண்டுகள் அதிக அளவில் காணப்படும்.

மேலும் வரப்பு பயிர்கள் சாகுபடி செய்வதால் களைகளை கட்டுப்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக குமரி மாவட்டம் குருந்தன்கோடு வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உளுந்து, சூரியகாந்தி விதைகள் நெல் வரப்பில் விதைக்கும் பணியை நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் சத்திய ஜோஸ் ஆய்வு செய்தார். வயல் வரப்புகளில் உளுந்து மற்றும் சூரியகாந்தியை சாகுபடி செய்தல் தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜோஸ் விவசாயிகளுக்கு விளக்கினார்.

குருந்தன்கோடு வட்டார துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன் வரப்பு பயிர் சாகுபடி செய்வதற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விதைகள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் உள்ளது என்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குருந்தன்கோடு வட்டார உதவி விதை அலுவலர் பிரபாகரன், வட்டார உதவி வேளாண்மை அலுவலர் வனஜா, சசிகலா, ஜெயச்சித்ரா மற்றும் ஜெபின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை