×

டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழு கிராம மக்கள் பங்கேற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பேரையூர், நவ. 6: டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழு கிராம மக்கள் பங்கேற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா 6 சப்பர பவனியுடன், 7 ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்த திருவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, கே.சத்திரப்பட்டி, கிளாங்குளம், வன்னிவேலம்பட்டி, வி.அம்மாபட்டி, காடனேரி, ஆகிய 7 ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் திருவிழா துவங்கியதும், நேற்று ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் சப்பரத்தை பக்தர்கள் தலைச்சுமையாக வி.அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். இங்கு ஏற்கனவே செய்யப்பட்ட 7 முத்தாலம்மன் சிலைகளுக்கு பூஜை செய்து அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வி.அம்மாபட்டியைத் தவிர மற்ற ஊர்களிலிருந்து வந்துள்ள சப்பரங்களின் முன்னால் முத்தாலம்மன்கள் அணிவகுத்து செல்ல, சப்பரங்கள் பின் தொடர்ந்து பவனி சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தாய் கிராமம் என்பதால் வி.அம்மாபட்டிக்கென தனி சப்பரம் இல்லை.

இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான சப்பரங்கள் பவனி மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, டி.கல்லுப்பட்டி வழியாக சென்ற மதுரை, தேனி, விருதுநகர், ராஜபாளையம், குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கான பஸ்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பேரையூர் டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று மாலை பொங்கல் வைத்தும், அனைத்துவிதமான பூஜைகள் நடத்தியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, முத்தாலம்மன் சிலைகள் மற்றும் முளைப்பாரிகள் அந்தந்த ஊர்களில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவால் இப்பகுதியில் வறட்சி நீங்கி மழைபெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி பொதுமக்களின் ஐதீகம். இத்திருவிழாவிற்கு 7 ஊர்கள் மட்டுமின்றி அவர்களது வெளியூர்களிலுள்ள உறவினர்களும் கலந்து கொண்டதால், மிகப்பெரிய திருவிழா பெருமையை இவ்விழா பெற்றது.

Tags : tens of thousands ,Muthalamman Temple Festival ,area ,D.Kallupatti ,villages ,
× RELATED கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா...