×

டிகேஎன் 9 ரக நெல் கொள்முதல் செய்ய மறுப்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர், நவ.6: திருவாரூர் தாலுகா குன்னியூர் வருவாய் சரகத்திற்குட்பட்ட குன்னியூர், பாலையூர், வேப்பத்தாங்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் 75க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை பயிராக டி.கே.என் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அறுவடை செய்யப்பட்டுள்ள இந்த ரக நெல்லை குன்னியூர் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய மறுப்பதை கண்டித்து நேற்று அந்த கொள்முதல் நிலையம் முன்பாக விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் மற்றும் விவசாயிகள் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மதியம் 2 மணி அளவில் வருவாய்த்துறையினர் மற்றும் நுகர்வோர் வாணிப கழக ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து டி.கே.என் 9 ரக நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்திரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : purchase ,DKN ,
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு