×

மானாவாரி பகுதியில் விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கும் மழைநீரை முறையாக பயன்படுத்த வேண்டும்

பெரம்பலூர், நவ. 6: மானாவாரி பகுதியில் விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கும் மழைநீரை முறையாக பயன்படுத்த வேண்டுமென நீர் சேகரிப்பு மற்றும் வறட்சிகால பாசனம் பற்றிய செயல்முறை விளக்கத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி பகுதியில் நீர் சேகரிப்பு மற்றும் வறட்சிகால நீர் பாசனம் பற்றிய செயல்முறை விளக்கம் நேற்று நடந்தது. பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர், இணை பேராசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். செயல்முறை விளக்கத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாயத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மழைநீரை முறையாக பயன்படுத்த வேண்டும். மானாவாரி பகுதிகளில் வெற்றிகரமாக விவசாயம் செய்வதற்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் வறட்சிகால நீர்ப்பாசனம் முக்கியம். பண்ணை குட்டைகள் தனிப்பட்ட விவசாயிகளின் வயல் அல்லது சமூக அடிப்படையில் கட்டலாம். பண்ணை குட்டையில் சேகரித்த நீரை மழை குழாய், தெளிப்பான்கள், சொட்டுநீர் பாசனம் மூலம் பருத்தி, மக்காச்சோளம் உளுந்து, துவரை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற பயிர்களுக்கு திறம்பட அளிக்கலாம் என்றார்.

பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் 3,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 2 பண்ணை குட்டைகள் உள்ளன. கடந்த 2 மாதங்களில் பெய்த 98 மிமீ மழையை கொண்டு 6 ஆயிரம் கனமீட்டர் நீர் பண்ணை குட்டையில் சேகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் சராசரியாக 398 மிமீ மழை பெய்யும். இதில் 3, 4 முறை பண்ணை குட்டைகளை நிரப்பலாம். இந்த நீரை கொண்டு மழை குழாய் தெளிப்பான்கள் மூலம் 10 ஹெக்டர் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம் என்றார்.

இதைதொடர்ந்து வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பண்ணை குட்டையில் சேகரித்த நீரை மழை குழாய், தெளிப்பான்கள் தொழில் நுட்பத்தின் மூலம் உளுந்து பயிருக்கு நீர்பாசனம் அளிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் பண்ணை மேலாளரும், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் உதவி பேராசிரியருமான சக்திவேல் பேசும்போது, முதல் பயிர் சாகுபடிக்கு பிறகும் பண்ணை குட்டையில் அதிகப்படியான நீர் இருப்பின் அதை வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிற காய்கறி பயிர்களை கோடை காலத்தில் மழை குழாய் தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம் என்றார். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மணிமாறன், ஆனந்தி, சித்ரா மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜபிரியா, அம்சகவுரி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் வேல்முருகன், வடிவேல், தவமணி பங்கேற்றனர்.

Tags : area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி