×

காலி பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.6: காலி பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 750க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாகவுள்ள 750க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணி என்பது மருத்துவருடன் இணைந்த பணியாகும். எனவே மருந்தாளுநர் பணி நேரம் 9, 4 பணிக்கான அரசாணை 82 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலக மூலம் பரிந்துரைக்கப்பட்டு அரசு விதிகளின்படி முறையாக பதவி நியமனம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 32 மாவட்ட மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். பதவி உயர்வு தேக்கநிலையினை போக்கிட கூடுதலாக மூன்று கட்ட பதவி உயர்வு பணியிடங்கள், மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குநர், மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும். 42 சுகாதார பகுதி மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருந்து கிடங்குகளில் தடுப்பு ஊசி மற்றும் மருந்து பொருட்களை பராமரித்து சீராக விநியோகம் செய்ய 1948 மருந்தியல் சட்டப்படி தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும். தலைமை மருந்தாளுநர் மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ராமநாதகணேசன், தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

Tags : Demonstration ,Pharmacists' Association ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்