×

ஊக்க ஊதிய உயர்வு ரத்து ஆணையை திரும்பபெற கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.6: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார். நாகை கல்வி மாவட்ட தலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மயிலாடுதுறை கல்வி மாவட்ட செயலாளர் மணிவண்ணன், நாகை கல்வி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 50 ஆண்டு காலமாக பெற்று வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணை 37 மற்றும் 116ஜ உடனே திரும்ப பெற வேண்டும். மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 17 பி ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் விதிமுறை மீறிய பதவி உயர்வு, பணப்பலன் பெறுவதில் ஏற்படும் காலதாமத்தை கலைந்து அரசுப் பள்ளியைப் போல் பதவி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். 40 வயதிற்கு மேல் ஆசிரிய பணியில் எவருக்கும் பணி நியமனம் கிடையாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சீர்காழி கல்வி மாவட்ட செயலாளர் முருகபாண்டியன், நாகை கல்வி மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக ஞானசேகரன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,teachers ,revocation ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...