×

பிஏபி பாசன சங்க தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

உடுமலை,நவ.6:பிஏபி பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறுகின்றன. இந்த பாசன பகுதிகளில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின்கீழ் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட ஆட்சிமன்ற குழு செயல்படும். இவர்களை சங்க உறுப்பினர்களான விவசாயிகள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். அதன்படி, கடந்த 2009-ம் ஆண்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்தது. இதன் நிர்வாகிகளின் பதவி காலம் 2015-ம் ஆண்டுடன் முடிந்தது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி கோட்டத்தில் உடுமலை கால்வாய் பகுதியில் 23 சங்கங்களும், புதுப்பாளையம் மற்றும் பூலாங்கிணர் கால்வாய் பகுதிகளில் தலா 6 சங்கங்களும் உயர்மட்ட கால்வாய், ஏழு குளம் பாசனம், உப்பாறு ஆகிய பகுதிகளில் தலா ஒரு சங்கமும், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் நீட்டிப்பு கால்வாய் பகுதிகளில் 21 சங்கங்களும் என மொத்தம் 59 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.

இதில் ஒவ்வொரு சங்கத்திலும் குறைந்தபட்சம் 400 விவசாயிகளும், அதிகம்பட்சம் 1500 விவசாயிகளும் உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது 60 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருந்தனர். வரும் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை பிஏபி பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் பார்வையிடலாம். இதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் பணிகள் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு, விவசாயிகள் அந்தந்த ஆயக்கட்டு பகுதிக்குட்பட்ட பகுதியில் தங்களது பெயரில் நிலம் உள்ளதற்கான பட்டா ஆவண நகலை விண்ணப்பத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். பெயர்களை சேர்ப்பதற்கு ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் அந்தந்த ஆயக்கட்டு பகுதிக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெயர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் ஆட்சேபணை குறித்து ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு வாக்காளரும் சங்கத்தின் ஆட்சிமன்ற குழு தலைவர் பதவிக்கு ஒரு வாக்கும், உறுப்பினர் பதவிக்கு ஒரு வாக்கும் அளிக்க வேண்டும்.

Tags : BAP Irrigation Association Election ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...