×

நீலகிரியில் மூன்று நாட்களாக மழை

ஊட்டி,நவ.6: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் நீலகிரியில் சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டதில் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கன மழை பெய்தது. ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்ட போதிலும், குன்னூர், குந்தா, பர்லியார் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

மேலும், பகல் நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்கிறது. கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் அவ்வப்போது கன மழை பெய்வதால் தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. பெரும்பாலான விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க துவங்கியுள்ளனர். அதேபோல், ஒரு சில பகுதிகளில் விதைப்பு பணிகளையும் துவக்கியுள்ளனர். அதே சமயம் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்களாக திகழும் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, பைக்காரா போன்ற பகுதிகளில் மழை குறைந்தளவே பெய்து வருகிறது. நேற்று நீலகிரியில் பெய்த மழையின் அளவு மிமீ.,ல்: குன்னூர் 51, பர்லியார் 30, கோத்தகிரி 35, கெத்தை 19, கிண்ணக்கொரை 35, குந்தா 1.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...