×

புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம் தீபத்திருவிழாவுக்குள் முடிக்க முயற்சி திருவண்ணாமலையில் முடங்கி கிடந்த

திருவண்ணாமலை, நவ.5: திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, தமிழகம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக, திருவண்ணாமலையில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த புறவழிச்சாலை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். திருவண்ணாமலை நகர புறவழிச்சாலை திட்டத்தில், வேலூர் சாலை, அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, திருக்கோவிலூர் சாலை சந்திப்பு வரை பணிகள் ஏற்கனவே முடிந்து பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன.

ஆனால், திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் தொடங்கி, மணலூர்பேட்டை சாலை, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை வரை இணைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருவண்ணாமலை நகரின் முழு வட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி, அரை வட்ட சாலையாக முடங்கியிருப்பதால், ஆன்மிக நகரின் போக்குவரத்து நெரிசலும், சிக்கலும் முழுமையாக தீர்வு காணாமல் இருந்தன. இந்நிலையில், திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரையின் தொடர் முயற்சியால், திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி தற்போது முழு வீச்சில் தொடங்கியிருக்கிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலை திட்ட உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று இந்த பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தியிருந்தார்
.
அதன் தொடர்ச்சியாக, தற்போது திருவண்ணாமலை புறவழிச்சாலை அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்குள் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், புறவழிச்சாலையை இணைக்கும் அணுகு சாலைகளும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புறவழிச்சாலை சீரமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு தகுதியானதாக தீபத்திருவிழாவுக்குள் மாற்றப்பட்டால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்துவரும் வாகனங்கள், சிக்கலின்றி வந்து செல்ல வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : construction ,Thiruvannamalai ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...