×

மேல்மங்கலம் விவசாயத்திற்கு சோத்துப்பாறையில் தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் திமுக மனு

தேனி, நவ.5: சோத்துப்பாறை அணையில் இருந்து மேல்மங்கலம் மற்றும் ஜெயமங்கலம் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நேற்று இரவு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தினார். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் எம்எல்ஏ சரவணகுமார், பெரியகுளம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் எல்.எம்.பாண்டியன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தங்கவேல், சரவணன், ஈஸ்வரன், பாலு, சண்முகவள்ளி, செல்வி, ரேவதி மற்றும் அமமுக கவுன்சிலர் மருதை அம்மாள் ஆகியோர் நேற்று இரவு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.  அங்கு கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து பேசினர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்செல்வன் கூறுகையில், சோத்துப்பாறை அணையில் தற்போது 120 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. இந்நீரை கொண்டு மேல்மங்கலம் ஜெயமங்கலம் பகுதியில் உள்ள 2400 ஏக்கர் பாசன பரப்பிற்கு ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட 2009ம் ஆண்டு அரசாணை உள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அப்பகுதி ஆயக்கட்டுதாரர்கள் கோரிக்கை விடுத்ததற்கு அரசு தரப்பில் 2009ல் வெளியிட்ட அரசாணை செல்லாது. எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதாக தெரிவித்தனர். இதனை கலெக்டரிடம் தெரிவித்தோம். அதற்கு கலெக்டர் 2009 அரசாணை செல்லும், தண்ணீர் திறந்துவிட அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

அதேசமயம் கைலாசபட்டி மேல்புறம் 600 ஏக்கர் நிலத்திற்கு மட்டும்  சோத்துப்பாறை அணையில் இருந்து எந்த ஒரு அரசாணையும்  இல்லாமல் எப்படி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறோம். மேலும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பதினோரு மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அங்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை.  கடந்த 6 மாதமாக கொரோனாவை காரணம் சொல்லி தேர்தல் நடத்தவில்லை இதன் காரணமாக வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கவுன்சிலர்கள் அவரவர் பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளுக்கு பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். அதனையும் பரிசீலிப்பதாக கலெக்டர் தெரிவித்தார் என்றார்.

Tags : DMK ,Collector ,Sothuppara ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...