ஆர்எஸ். மங்கலம் அருகே குறைந்த மின்னழுத்த சப்ளையால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது தனி டிரான்ஸ்பார்மர் வைக்க கோரிக்கை

ஆர்எஸ். மங்கலம், நவ. 5: ஆர்எஸ். மங்கலம் அருகே குறைந்த மின்னழுத்த சப்ளையால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆர்எஸ். மங்கலம் அருகே சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட மொன்னார்கோட்டை, விருதன்வயல் உள்ளிட்ட கிராமங்களுக்கு வளனை, எலிக்குளம் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்ம் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர்களில் மின்திறனுக்கு ஏற்றார்போல் மின்இணைப்பு வழங்காமல் கூடுதல் கிராமங்களையும் இணைத்து மின்சப்ளை செய்து வருகின்றனர். இதனால் மொன்னார்கோட்டை, விருதன்வயல் பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் மிக்சி, கிரைண்டர், பேன், பல்ப் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இவை அடிக்கடி பழுதாகியும் விடுகின்றன. இதனால் மனஉளைச்சலுடன், பண விரயமும் ஏற்படுகிறது. மொன்னார்கோட்டை, விருதன்வயல் பகுதிகளில் தனித்தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் புதிய டிரான்ஸ்பார்ம்கள் அமைத்து சீரான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: