கொரோனாவால் கதிகலங்கிய கட்டுமான தொழில் மூலப்பொருட்கள் விலை உயர்வு பாதியில் நிற்கும் கட்டிடங்கள் திரும்பாத வடமாநிலத்தவர்கள்

மதுரை, நவ.5: ெகாரோனா ஊரடங்கால் கட்டுமான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, கட்டிடம் கட்டுவோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள், ஜவுளிக் கடைகள் ஜூவல்லரி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

கொரோனா வந்து, அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது என சொல்லும் அளவுக்கு அனைவரும் (பெரிய நிறுவன அதிபர்கள் உள்பட) கடும் பாதிப்புக்குள்ளாகினர். பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். 4 மாதங்களில் கட்டிடம் கட்டி முடித்து விடலாம் என கட்டுமான பணியை துவங்கியவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், ஊரங்கில் பலகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர். வீடு கட்டியவர்கள், மீதமுள்ள கட்டுமான பணியை துவங்கலாம் என எண்ணியபோது, உடனடியாக பணியை துவக்க முடியவில்லை.

ஆந்திரா, ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் கிரானைட், மார்பிள் கற்கள், டைல்ஸ் போன்றவை மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வரவில்லை. இதனால், கடைகளில் இருப்பில் இருந்த கிரானைட் உள்ளிட்ட கற்களை 20 சதவீதம் வரை விலையை உயர்த்தி விற்றனர். ஆனாலும், தங்களுக்கு வேண்டிய டிசைன், கலர் பிடிக்காததால், கட்டிடம் கட்டுவோர், ஊரடங்கில் தளர்வு அறிவித்தும் கட்டுமான பணியை துவங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது ெவளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் கிரானைட் மற்றும் கட்டுமான மூலப்பொருட்கள் வரத்துவங்கியுள்ளது. இருப்பினும், விலை குறைந்தபாடில்லை. 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. கட்டிடம் கட்டுவோர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டு, கதிகலங்கிப்போய் உள்ளனர்.

ஒத்தக்கடையில் ஹார்டுவேர் கடை நடத்திவரும் செந்தில்குமார் கூறுகையில், “கட்டிடங்களுக்கு மிக முக்கியத் தேவையான பைப்புகள், கம்பிகள், பூட்டு, தாழ்ப்பாள், சிமெண்ட், சுவீட்ச், வயர் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ரூ.360க்கு விற்ற சிமென்ட் மூடை ரூ.420க்கு விற்கிறது. இதேபோல், ரூ.48 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்ற ஒரு டன் கம்பி ரூ.56 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரை விற்கிறது. இது தவிர எம்.சாண்ட் விலையும் உயர்ந்துள்ளது” என்றார். சமூக ஆர்வலர் முகாம்பிகாவிடம் கேட்டபோது, “வடமாநிலங்களில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வந்து, தங்கி வேலைபார்த்த கட்டிட தொழிலாளர்களில் பெரும்பகுதியினர், கொரோனாவால் வேலையில்லாமல், தங்களது சொந்த ஊருக்கே சென்று விட்டனர். இதனால் கட்டிடம் கட்டுவோர், தொழிலாளர்கள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், உள்ளூரில் இருக்கும் தொழிலாளர்கள், அதிகக்கூலி கேட்கின்றனர்” என்றார்.

Related Stories:

>