×

தஞ்சை மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

தஞ்சை, நவ. 5: தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோரி பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சி மயானத்தை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இதைதொடர்ந்து ரூ.25 லட்சம் மதிப்பில் சீர்மிகு நகரமைப்பு திட்டத்தின்கீழ் குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

பின்னர் மயானத்துக்கு அருகில் உள்ள பொது சுகாதார மையத்தை பார்வையிட்டு சுகாதார மையத்தில் கழிவறை, குளியலறை போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து வடவாறு அருகே அமைந்துள்ள ராஜகோரி குளத்துக்கு வரும் வரத்து வாய்க்கால் மற்றும் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் ஆகியவற்றை பார்வையிட்டு மண்மேடுகளை அகற்றி குழாய் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சில நேரங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என தெரிவித்த பொதுமக்களிடம் உடனடியாக போதுமான குடிநீர் கிடைக்க அலுவலர்கள் வழி செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடிய கலெக்டர் கோவிந்தராவ், இனிப்புகள் வழங்கி குழந்தைகளின் தேவையை நிறைவேற்ற பெற்றோர்கள் படிக்க வைக்க அறிவுறுத்தினார்.

இதைதொடர்ந்து கரந்தை பூக்குளம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு குறுவை சாகுபடி நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். இதையடுத்து மேம்பாலம் அருகே உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் உணவு பகுப்பாய்வு கூடத்தை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் மகேந்திரன், தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், உணவு பகுப்பாய்வு கண்காணிப்பாளர் வல்லவரசு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : area ,Tanjore Corporation ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...