×

தேக்காட்டூர் கிராமத்தில் நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை, நவ.5: தேக்காட்டூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப  பயிற்சி அளிக்கப்பட்டது. அரிமளம் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து பயிற்சி தேக்காட்டூர் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து, தலைமையில் தேக்காட்டூர் ஊராட்சி தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், அரிமளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி, முக்கிய இடுபொருட்களான விதை, தண்ணீர், உரம், பயிர் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடன், இயந்திரங்கள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுவதையும் நெல்லுக்கு அடியுரம் மற்றும் மேலுரம் இடுவதையும் விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் வீரமணி மண் மாதிரி எடுத்தல் மற்றும் இயந்திர நடவு முறைகளை விளக்கி கூறினார். தேக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மற்றும் ரவிமுருகன் ஆகிய விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் கயல்விழி நெல் விதை உற்பத்தி முறைகள் குறித்து விளக்கினார்.

நெற்பயிருக்கு இலைவண்ண அட்டையினை பயன்படுத்தி மேலுரம் இடுதல், பூச்சி நோய்த் தாக்குதல் அறிகுறிகள் கண்டறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் முறைகளை பெரியசாமி வயலில் செயல்விளக்கம் மூலம் கார்த்திக், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் சவுமியா, உதவி வேளாண்மை அலுவலர் செயல்விளக்கம் மூலம் விளக்கினர். பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு இயந்திர நடவு, பயிர்க் காப்பீடு மற்றும் பயிர்ப் பாதுகாப்பு குறித்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். நெல் இயந்திர நடவு திருந்திய சாகுபடி முறைகள் குறித்து சிறப்பான முறையில் கருத்து காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்துகொண்ட விவசாயிகளுக்கு திருப்பதி, ஆலோசகர் நெல் சாகுபடி குறித்த கையேடு மற்றும் உயிர் உர பாக்கெட்டுகளை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : village ,Thekkady ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...