×

கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி, நவ. 4: புதுவையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம்
ஏற்பட்டது. புதுவையில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவலர் தேர்வை திட்டமிட்டபடி 4ம்தேதி நடத்த வேண்டும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் அந்தோணி, வாலிபர் சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், எழிலன், ஆனந்த், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை
வலியுறுத்தி கொடிகளுடன் கோஷமிட்டவாறு தபால் நிலையம் நோக்கி வந்த அவர்களை நேருவீதி- மிஷன் வீதி சந்திப்பில்  பெரியகடை போலீசார் பேரிகார்டு போட்டு தடுத்தனர்.

ஆனால் தடுப்பு கட்டைகளை இளைஞர்கள், வாலிபர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மணக்குள விநாயகர் கோயில் அருகே வந்தடைந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இதை போலீசார் தடுத்த நிலையில் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த தடியடி  நடத்தினர். இருப்பினும் அங்கேயே நடுரோட்டில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை பெரியகடை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது.

Tags : mansion ,governor ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...