கல்லூரி மாணவியின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் கலெக்டர் வழங்கினார் திருவண்ணாமலை அருகே வறுமையில் தவித்த

திருவண்ணாமலை, நவ.4: திருவண்ணாமலை அருகே வறுமையில் தவித்த கல்லூரி மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட் செல்போனை கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சவுந்தர்யா(18). இவர், திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த அவர், தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். சொந்த வீடு, நிலம் இல்லாமல் வறுமையில் தவிக்கும் மாணவி சவுந்தர்யா, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லாமல் தவித்து வந்தார்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாணவி சவுந்தர்யா தன்னுடைய கல்விக்கு உதவுமாறு மனு அளித்தார். இது தொடர்பாக, அதிகாரிகள் மூலம் விசாரித்த கலெக்டர், மாணவியின் வறுமை நிலையை உறுதி செய்தார்.

அதைத்தொடர்ந்து, மாணவி சவுந்தர்யா மற்றும் அவரது தாயை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரது குடும்பத்தினருக்கான புத்தாடைகள், இனிப்பு, பழங்கள், ஸ்மார்ட்போன், குடும்ப செலவுக்கு ₹2,500 ஆகியவற்றை வழங்கினார். கல்விதான் வாழ்வில் உயர்வு தரும் நிலையான செல்வம், எனவே, தொடரந்து படித்து முன்னேற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். கலெக்டரின் திடீர் உதவியால் நெகிழ்ச்சியடைந்த மாணவியும், அவரது தாயும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>