×

தாழம்பூர் அருகே சாலையோர கால்வாயில் வீசப்பட்ட 30 லட்சம் குட்கா மூட்டைகள் பறிமுதல்

திருப்போரூர்: தாழம்பூர் அருகே சாலையோர கால்வாயில் வீசப்பட்ட 30 லட்சம் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து,  அதனை யார் வீசியது என தீவிரமாக விசாரிக்கின்றனர். சென்னை புறநகர் பகுதியான தாழம்பூர், சிறுசேரி, நாவலூர், படூர், கேளம்பாக்கம்,  மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்  தடையின்றி கிடைக்கின்றன. பல கடைகளில் இவை தடை செய்யப்பட்ட பொருட்கள் என தெரிந்தும், பொதுமக்களின் கண் பார்வையில் படும்படி  தொங்க விடப்பட்டு விற்பனை செய்கின்றனர்.

மேலும், சென்னைப் புறநகர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் கேளம்பாக்கம் மற்றும்  தாழம்பூர்  போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்துகின்றனர். அப்போது, பல குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா மூட்டைகள்  கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் மேடவாக்கம் அருகே பொன்மார் ஊராட்சியில் இருந்து மாம்பாக்கம் செல்லும் வழியில் போலச்சேரி என்ற இடத்தில்  சாலையோர கால்வாயில், நேற்று காலை மர்ம மூட்டைகள் கிடந்தன. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.

அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. இதையடுத்து குட்கா மூட்டைகளை காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசாரின்  சோதனைக்கு பயந்து வியாபாரிகள், குட்கா மூட்டைகளை சாலையோரத்தில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவற்றை கொண்டு  வந்து வீசியது யார் என அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். சாலையில் வீசப்பட்ட குட்கா  மூட்டைகளின் மதிப்பு சுமார் ₹30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : roadside canal ,Thalampur ,
× RELATED கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின்...