×

6 வழிச்சாலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் கடும் வாக்குவாதம்: ஊத்துக்கோட்டையில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நடந்த 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் மற்றும் நிலம் பாதிக்கப்பட்டவர்களின்  கருத்து கேட்பு  கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல்  ஆந்திர மாநிலம்  சித்தூர் வரை  128 கி.மீ.தூரத்திற்கு 3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக  அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளன.  இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6  வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.

பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது. இதில், ஊத்துக்கோட்டை வட்டத்தில் சென்னங்காரணை  கிராமத்தில்  தான் முதன் முதலில் கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதியன்று 6 வழிச்சாலைக்காக அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது.  இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், 2வது முறையாக ஆகஸ்ட் 1ம் தேதி அளவீடு செய்து கல்லை நட்டனர். இதற்கும்  அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டனர். அதன்பிறகு அக்டோபர் 5ம்  தேதி விவசாயிகள் மற்றும் நில எடுப்பு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் எங்கள் கிராமம் வழியாக 6 வழிச்சாலை  செல்லக்கூடாது என மனு கொடுத்தனர்.

பின்னர் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7, 8 ஆகிய தேதிகளில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், 18  கிராம விவசாயிகளும் 6 வழிச்சாலைக்கு ஆட்சேபனை கடிதம் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள், அரசுக்கே  விவசாயிகள் நிலத்தை எழுதி  கொடுப்பதாக கையொப்பம் பெற்றுக்கொண்டனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, ஊத்துக்கோட்டையில்  தனியார்  திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்  சுற்றுச்சூழல் பற்றிய மக்கள் கருத்து கேட்பு கூட்டம்  நடைபெற்றது. இதில்,  அப்போதைய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. அப்போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்தனை எதிர்ப்புகளையும் தொடர்ந்து நேற்று மீண்டும் விவசாயிகள் மற்றும் நிலம்பாதிக்கப்பட்டவர்கள்  அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது இதில் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு தாசில்தார் பிரித்தி முன்னிலை வகித்தார் .
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது, “தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்ததாக நெற்களஞ்சியமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம் தான்.  விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல், ஏரிகள் சுடுகாடு மீது சாலைபோடுவீர்கள் சிறு குறு விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.
ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள ஏரிகளுக்குள்ளும் சாலை செல்வதால்  15 ஏரிகளும் பாதிக்கப்படுகிறது.

இதனால், நிலத்தடிநீர் மட்டம் குறைந்து சென்னைக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும். திருவள்ளூர் மாவட்டம் விவசாயத்தால்  அழிந்தால் சென்னையும்  அழியும். இந்த 6 வழிச்சாலை 20 சதவீத வனத்துறையும், 70 சதவீத விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டம்  போட்டுவிட்டார்கள். இந்த சாலையால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  6 வழிச்சாலை தேவையில்லை” என்றனர். இந்த கூட்டம் 3 நாட்கள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் அதிகாரிகளின் ஆலோசனையும், அடுத்தடுத்த நாள் விவசாயிகள் தங்கள் கருத்தை  எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாளிலேயே விவசாயிகள் அதிகாரிகளை முற்றுயிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 

Tags : Farmers blockade officials ,referendum meeting ,
× RELATED அனைத்து கட்சி கருத்துக்கேட்பு கூட்டம்