×

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குவிந்து கிடக்கும் குப்பையால் சீர்கேடு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, மகளிர் காவல் நிலையம், துணை மின் நிலையம், அங்கன்வாடி,  ஆலயங்கள்,  வணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன்  மையப்பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் பசுமைக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்கும்போதே, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனையும் மீறி உரக்குடிலை அதிகாரிகள் அமைத்தனர். இங்கு, ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து பிரித்து உரமாக்கும்  பணி நடைபெறுகிறது. கடந்த 6 மாதமாக பசுமைகுடிலில் குப்பைகளை உரமாக்கும் பணி சரிவர நடைபெறவில்லை.

இதனால், இங்கு குப்பைகள் மூட்டை, மூட்டையாக தேங்கிக் கிடக்கின்றன. மேலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பல இடங்களிலும் குப்பைகள்  அள்ளப்படாமலேயே  குவிந்து கிடக்கின்றன. தற்போது, அடிக்கடி பெய்து வரும் மழையால் குப்பைகள் மக்கி கடும் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால்,  பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனையடுத்து, உரக்குடில், தெருக்களில் உள்ள   குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பினர். இருந்த போதிலும், அதிகாரிகள் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் தூர்நாற்றத்தால் தவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பசுமை உரக்குடிலுக்கு ஒன்று திரண்டு வந்து அங்கு குப்பைகளை  அகற்றகோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆவடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  பொதுமக்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து கலைய செய்தனர்.

Tags : protest ,Housing Board ,apartment ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...