×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவக்கம் 7ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார்

திருச்சி,நவ,4: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இது வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு 5.30 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. இதில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இதே போல் 2ம் திருநாள் முதல் 6ம் திருநாள் மற்றும் 8ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.15 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் நிறைவு நாளான 9ம் நாள் (11ம் தேதி) நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Namperumal Nellalavu ,spring festival ,Aurangam Ranganathar Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த...