×

திருநள்ளாறில் சனி பெயர்ச்சிக்கு முன்னதாக ஆன்மிக பூங்கா திறக்கப்படும்

காரைக்கால், நவ.4: திருநள்ளாறு சனி பெயர்ச்சிக்கு முன்னதாக ஆன்மிக பூங்கா திறக்கப்படும். என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். காரைக்கால் திருநள்ளாறு புறவழிச்சாலை அருகே, கோயில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நவக்கிரக கோயில்கள் மாதிரிகளுடன், ஆன்மிக பூங்கா அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் முஹம்மது மன்சூர், மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா மற்றும் மாவட்ட துணை கலெக்டர், பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து திருநள்ளாற்றில் நடைபெற்று வரும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம், சம்பந்தர் ஓடை எனும் குளம் விரிவாக்கம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியது: கோயில் நகர திட்டத்தின் கீழ், நவகிரக கோயில்கள் மாதிரிகள், குளம், நடைபாதை, மூலிகை செடிகள் அடங்கிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், ஆன்மிக பூங்கா மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இதே கோயிலில் நகரத் திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. குறிப்பாக, ஆன்மிக பூங்காவை, வரும் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் நளன் குளத்தைசுற்றி ஏற்கனவே தேங்காய், பூ உள்ளிட்ட பொருட்களுடன் கடைகள் வைத்து இருந்தவர்களுக்கு, கடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். கூடுதல் கடைகள் கட்ட வேண்டி இருப்பதால், அதையும் வருகிற சனி பெயர்ச்சிக்கு முன்னதாக கட்டி, அனைவருக்கும் கடைகளை கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் அரசுப் பள்ளியையும் விரைவில் கட்டி முடித்து திறப்பதற்கு அறிவுறுத்தி உள்ளேன். முக்கியமாக திருநள்ளாறில் சாலை இல்லாத பகுதிகளில் சாலை அமைப்பதற்கு தேவையான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன என்றார்.

Tags : park ,Thirunallar ,Saturn ,shift ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...