×

வணிகர்கள் வங்கி கடன் வசூல் ஒத்திவைக்க வேண்டும்

ஈரோடு, நவ. 4: வணிகர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்துவதற்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட கூட்டம், மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில நடந்தது. மாநில துணை செயலாளர் சிவநேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தேவராஜா வரவேற்றார். மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் வணிகர்கள் பெற்ற வங்கி கடன்கள் தவணையை வரும் மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும். எந்த சூழலிலும் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது. சில்லறை வணிகர்களுக்கு, எவ்வித நிபந்தனையும் இன்றி ரூ.50 லட்சம் வரை வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கடன் மீதான வட்டி, 9 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சென்னை, கோவை, மதுரையில் உள்ளது போல ஈரோட்டில் வணிக கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சில்லறை வணிகர்களுக்காக, ஒருங்கிணைந்த வணிக வளாகம், சேமிப்பு கிடங்குடன் அமைக்க வேண்டும். வீடுகளில் உணவு பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது. புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தக்கூடாது. வணிகர்களுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நிரந்தர மார்க்கெட் கடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Tags : Merchants ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...