×

தூர்வாரிய சஞ்சீவிராயன் குளத்திற்கு நீர் வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு, நவ. 4: விவசாயிகளால் தூர்வாரப்பட்ட சஞ்சீவிராயன் குளத்திற்கு மழை நீர் வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு தூக்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள சஞ்சீவிராயன் குளம் 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாதி வனத்திலும் மீதி சமவெளியிலும் உள்ள இக்குளமானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்துக்கு, மலைப்பகுதியான கொங்காடை, போளி, தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று பல முறை விவசாயிகள் வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் இணைந்து தூர்வாரினர். இந்நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் பெய்த மழையால் குளத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்து வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து சஞ்சீவிராயன் குளம் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகர் சுபி தளபதி கூறியதாவது: குளத்தை தூர்வார வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் விவசாயிகள், இளைஞர்களை ஒருங்கிணைத்து சஞ்சீவிராயன் குளம் பாசன விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதமாக குளத்தை தூர்வாரினோம். மொத்தம் 15,000 டிராக்டர் யூனிட் மண் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது. கரைகளில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் மலைப்பகுதியில் பெய்த மழை நீர், குளத்துக்கு வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இக்குளம் மூலம் சுமார் 2,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். இவ்வாறு கூறினார்.

Tags : pond ,Sanchivirayan ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...