×

திருக்குறுங்குடி அருகே புதிய பாலத்திற்கு குறுகலாக இணைப்பு சாலை பணி ரூபிமனோகரன் ஆய்வு

களக்காடு,நவ.3: திருக்குறுங்குடி அருகே புதிய பாலத்திற்கு இணைப்பு சாலை குறுகியதாக அமைக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து ரூபி
மனோகரன் நேரில் ஆய்வு செய்தார்.  நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ஆவரந்தலை-தளவாய்புரம் இடையே நம்பியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் கடந்த 1.12.2017ம் தேதியன்று இரவில் திடீர் என இடிந்து விழுந்தது. பாலம் கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்ததாலேயே கட்டப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பாலம் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.   இந்நிலையில் இடிந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக அங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. புதிய பாலத்திற்கு இரண்டு புறமும் அமைக்கப்பட்டு வரும் இணைப்பு சாலை மிகவும் குறுகியதாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதனிடையே நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபிமனோகரன் புதிய பாலம் கட்டுமான பணிகளையும், இணைப்பு சாலையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘பாலத்திற்கு போடப்படும் இணைப்பு சாலை மிகவும் குறுகியதாக அமைக்கப்பட்டு வருகிறது, சாலை குறுகியதாக அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும், ஒரு வாகனம் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் வழி விட முடியாத நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதிக பொருட் செலவில் அமைக்கப்படும் பாலத்திற்கு இணைப்பு சாலை குறுகியதாக இருந்தால் போக்குவரத்து எவ்வாறு நடக்கும்? எனவே பாலத்திற்கு இரு புறமும் 20 அடி அகலத்தில் இணைப்பு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.  அவருடன் முன்னாள் மாவட்ட காங் தலைவர் மோகன்குமாரராஜா, வர்த்தக காங் முன்னாள் மாவட்ட தலைவர் சந்திரசேகர், நகர தலைவர்கள் களக்காடு ஜார்ஜ்வில்சன், திருக்குறுங்குடி முத்துராஜா, வட்டார தலைவர் அலெக்ஸ், ஜெபஸ்டின்ராஜ், அழகியநம்பி உள்பட பலர் வந்தனர்.

Tags : inspection ,Rubimanokaran ,Thirukurungudi ,bridge ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...