×

விலை குறைந்தது, பூச்சி தாக்குதல் ஏரியில் கொட்டிய 1 டன் தக்காளி; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சூளகிரி, நவ.3: சூளகிரியில் விலை குறைந்ததாலும், பூச்சி தாக்குதலாலும் ஒரு டன் தக்காளி பழங்களை விவசாயிகள் மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த தொடர் மழையால் தக்காளி நல்ல விளைச்சலை கொடுத்தது. விளைச்சல் அதிகரிப்பை தொடர்ந்து, மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ₹150 முதல் ₹200 வரை மட்டுமே விற்பனையானது. இதனால், சில்லரை விற்பனையில் கிலோ ₹7க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், விலை சரிவை தொடர்ந்து பூச்சி தாக்குதல் அதிகரித்ததால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அதை விற்பனை செய்ய வழியில்லாமல் சாலைகளிலும், ஏரிகளிலும் கொட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தியாகரசனப்பள்ளி ஊராட்சி ஒமதேபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒமதேபள்ளியில் பரவலாக தக்காளி சாகுபடி செய்துள்ளோம். தொடர் மழையால் விளைச்சல் அதிகரித்த நிலையில் திடீரென மர்ம பூச்சிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. தக்காளி காய்த்தவுடன் பூச்சிகள், கண்ணுக்கு புலப்படாத துவாரம் இட்டு முட்டையிடுவதும், பின்பு பழமானவுடன் அதிலிருந்து புழு வெளியேறுவதால், டன் கணக்கில் தக்காளி வீணாகியது. இப்பகுதியில் பலரது தோட்டங்களில் பூச்சி தாக்கியதால் ஒரு டன்னுக்கு மேலாக தக்காளி சேதமானது. சேதமான தக்காளியை அருகே உள்ள ஏரியில் மீன்களுக்கு உணவாக கொட்டி வருகிறோம். அறுப்பு கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளுக்கு கூட தக்காளி விலை கட்டுப்படியாகாத நிலையில், பூச்சி தாக்குதல் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வேளாண்மை துறையின் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : pest attack lake ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்