×

ஊர்வலத்துக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையால் தீட்சிதர்களுக்குள் கருத்து வேறுபாடு ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

சிதம்பரம், நவ. 3:     பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் சிவகாமி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத உற்சவ திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.  சுமார் 10 தினங்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினமும் சாமி வீதியுலா நடைபெறும். கொரோனா ஊரடங்கு நேரமாக இருப்பதால், நகரின் நான்கு வீதிகளிலும் சாமி வலம் வருவதற்கு உரிய முறையில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கோயில் தீட்சிதர்களிடம் கூறியிருந்தனர்.  இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் தலைமையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் கோயில் தீட்சிதர்கள்
பங்கேற்றனர்.

அப்போது சாமி வீதி உலாவிற்கு உரிய முறையில் அனுமதி கடிதத்தை எழுதி கொடுத்து அனுமதி பெற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கு கோயில் தீட்சிதர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமி வீதியுலா நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பழக்கம் இல்லை எனக் கூறி விட்டு சில தீட்சிதர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கிடையே தீட்சிதர்களில் மற்றொரு தரப்பினர், தாங்கள் அனுமதி பெற்றுக் கொள்வதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாமி வீதியுலா செல்வதற்கு அனுமதி பெறும் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
.

Tags : procession ,Dikshitars ,consultation meeting ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...