×

தியாகதுருகம் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சி, நவ. 3:  தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மணிமுக்தா ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் தினமும் அப்பகுதி பொதுமக்கள் தேவைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில், சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தியாக துருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், பணி மேற்பார்வையாளர் பச்சமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சித்தலூர் வரடியாயி அம்மன் கோயில் பகுதியில் வெட்டப்பட்டுள்ள புதிய கிணற்றிலிருந்து  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து 15  நாட்களுக்குள் தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Women ,Sacrifice Union ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...