×

கன்னியாகுமரியில் இருளில் மூழ்கும் திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி, நவ.3: கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. சிலையை சுற்றுலாத்துறை பராமரித்து வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர படகு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் இருந்தே இரவு நேரத்திலும் சிலையை பார்க்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிய வில்லை. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நள்ளிரவு வரை கடற்கரையில் நின்று கடல் அலையை ரசிக்கின்றனர். இதனால் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் மின் விளக்குகள் ஒளிர விடப்படுகின்றன. இரவு நேரத்தில் கடல் நடுவில் மஞ்சள் நிற விளக்குகளுடன் தங்க நிறத்தில் விவேகானந்தர் மண்டபம் ஜொலிக்கிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை பகுதி இருள்சூழ்ந்து உள்ளது. எனவே திருவள்ளுவர் சிலையில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி கூறியதாவது: திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்களின் அடையாளமான திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் விட்டுள்ளனர். இது சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்களை மன வருத்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திருவள்ளுவர் சிலையில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியவிட வேண்டும். இல்லையென்றால் பொது மக்கள், சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Tags : Thiruvalluvar ,Kanyakumari ,
× RELATED திருக்குறளில் வேள்வி!