×

பரமக்குடி புதுநகரில் கொசுக்களை பெருக்கும் கழிவுநீர் குளம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

பரமக்குடி, நவ. 3: பரமக்குடி புதுநகரில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடப்பால் கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பரமக்குடியில் வளர்ந்து வரும் பகுதியில் புதுநகரும் ஒன்று. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கால்வாய் வசதி முற்றிலும் இல்லாததால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் பல்கி பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள தெருக்களின் சாலைகள் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடக்கின்றன.

இதனால் வாகனங்கள் சேதமாகி விடும் என்பதற்காக சாலையோரமாக செல்ல வேண்டி நிலை உள்ளது. நகராட்சி பூங்கா என்ற பெயர் மட்டும்தான் உள்ளது. மற்றபடி முறையான பராமரிப்பு ஏதுமில்லை. பூங்காவிற்கு அருகிலே கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு வரவே இப்பகுதி மக்கள முகம் சுளிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராமு கூறுகையில், ‘புதுநகரின் பல தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. மழை நாட்களில் கேட்கவே வேண்டாம். அதேபோல் சாலை, பூங்காவின் நிலையும் மோசமாக உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் புதுநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : municipality ,sewage pond ,mosquitoes ,Paramakudi New Town ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...