×

துணை முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லை குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முன்னாள் ராணுவத்தினர் முடிவு

தஞ்சை, நவ. 3: துணை முதல்வரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தஞ்சை கலெக்டரிடம் முன்னாள் ராணுவத்தினர் மனு அளித்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராவிடம் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட தலைவர் அறிவழகன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் 70 பேர் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இரவு பணியில் காவலர்களுடன் சேர்ந்து கோயில் பாதுகாப்பு படை என பணியாற்றி வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளம் ரூ.1.86 லட்சம் உடனே வழங்க வேண்டும். அதேபோல் 2016ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய (அரியர்ஸ்) நிலுவைத்தொகை ரூ.1.38 லட்சத்தை வழங்காமல் இருந்து வருகின்றனர். எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 70 முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்தை வழங்ககோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் டிஜிபி, டிஐஜி, எஸ்பி ஆகியோரிடம் மனு அளித்தும் பயனில்லை. இதுகுறித்து மேல் அதிகாரியிடம் கேட்டபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிஐஜி ஆகியோரிடம் புகார் அளித்ததால் சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருப்பதாக கூறுகின்றனர். எனவே கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

Tags : hunger strike ,ex-servicemen ,Deputy Chief Minister ,
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...