×

கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வாட்ச் டவர் அமைக்க திட்டம்

கோவை, நவ. 3: கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க இப்பகுதிகளில் வாட்ச் டவர் அமைத்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து புது துணிகள் வாங்க, பொருட்கள் வாங்க என கடைத்தெருகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கோவையில் உள்ள கடைத்தெருக்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கூட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வாட்ச் டவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொரோனா தொற்று பரவுதலைத் தடுக்க கோவை மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். இதுதவிர கடைத்தெருக்களின் முக்கிய வீதிகளில் வாட்ச் டவர் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன’’ என்றார்.

Tags : watch tower ,malls ,crowds ,
× RELATED தஞ்சாவூரில் இளநீர் விற்பனை மும்முரம்: அலைமோதும் மக்கள் கூட்டம்