தாம்பரம் அருகே பரபரப்பு கல்லூரி மாணவன் சரமாரி வெட்டி கொலை: மர்மநபர்களுக்கு வலை

பெரும்புதூர், நவ.1: தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு ராம்ஜி நகரை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் (எ) பாபு (20). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ வணிகவியல் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அருளின் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, குன்றத்தூர் அருகே தர்காஸ் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொள்ள அபிஷேக் பைக்கில் சென்றார். அங்கு, உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பேசினார். பின்னர், வீட்டுக்கு புறப்பட்டார்.

மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும், எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள், அபிஷேக்கை வழிமறித்து தகராறு செய்தனர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள்,  மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிஷேக்கை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், அபிஷேக்கின் அண்ணன் மீது சோமங்கலம் போலீசில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிந்தது. இதனால், அவரது எதிரிகள், அபிஷேக்கை கொலை செய்தார்களா அல்லது காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>