×

குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ஒரு மூட்டை வெங்காயம் தரமறுத்த லாரி கிளீனரை தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவு

குடியாத்தம் நவ.1: குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ஒரு மூட்டை வெங்காயம் தர மறுத்த லாரி கிளீனரை சப்- இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக- ஆந்திர எல்லை, குடியாத்தம் அடுத்த சைனாகொண்டா சோதனைச்சாவடியில் நேற்று மதியம், தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குடியாத்தம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தினார்.

பின்னர், அவர், ஒரு மூட்டை வெங்காயத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு லாரியில் இருந்தவர்களிடம் கூறினாராம். ஆனால், லாரி டிரைவர் இஸ்மாயில், கிளீனர் பைரோஸ் தர மறுத்தனர். இதையடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், அவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கிளீனர் பைரோஸ் தட்டிக்கேட்டதில், ஆத்திரமடைந்த சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் அவரை லத்தியால் தாக்கினாரா. இதில் படுகாயம் அடைந்த பைரோஸ் முகத்தில் ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் சைனாகொண்டா சோதனைச்சாவடியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, டிஎஸ்பி தரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சமரசம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், படுகாயம் அடைந்த பைரோசுக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தது மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், கிளீனரை தாக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் எஸ்பி செல்வக்குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Tags : SP ,sub-inspector ,check post ,Armed Forces ,Gudiyatham ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்