×

நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் காய்கறி மார்க்கெட் அடிப்படை வசதியின்றி வியாபாரிகள் திண்டாட்டம்

நெல்லை, நவ.1: நெல்லை டவுன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கறி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடைகள் அனைத்தும் பொருட்காட்சி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. அப்பகுதியில் வர்த்தக மையம் பணிகள் தொடங்கியதால், காய்கறி கடைகள் தற்போது நெல்லை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கி வருகின்றன. மொத்தம் 86 கடைகள் உள்ள நிலையில் 50 கடைகளுக்கு மட்டுமே இடவசதி உள்ளது. மீதமுள்ள 36 கடைகளும் தனிநபர் நுழையவே வழியில்லாத சூழலில் இடநெருக்கடியில் சிக்கியுள்ளன. அங்குள்ள வியாபாரிகள் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய முடியவில்லை. இடநெருக்கடியால் தரை வாடகை வியாபாரிகளில் பலர் ஆர்ச் அருகே சென்றுவிட்டனர்.

பொருட்காட்சி மைதானத்தில் இயங்கி வரும் 86 கடைகளுக்கும் மாநகராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. முறையான கழிப்பிடம், குடிநீர் வசதிகளும் இல்லை. டவுன் மார்க்கெட் தற்போதைய இடத்திற்கு சென்றபோது மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் இரண்டே கால் ஏக்கரில் இடம் ஒதுக்கி தருவோம். 2 செக்யூரிட்டிகள் நியமிப்போம். சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டி தருவோம் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். அதில் எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. டவுனை பொறுத்தவரை காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தாலும், இடநெருக்கடியால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக எம்எல்ஏ அலுவலகம் அருகே வாகனங்கள் செல்ல மின்கம்பங்கள் இடையூறாக உள்ளது. மார்க்கெட்டிற்குள் செல்லும் சாலையும் மோசமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து வியாபாரி அழகேசன் கூறுகையில், ‘‘டவுன் காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. முகப்பு பகுதியில் தெருவிளக்கு வசதிகள் செய்யகோரி மாநகராட்சியில் முறையிட்டுள்ளோம். 36 கடைகள் வியாபாரம் செய்ய வழியின்றி தவிக்கின்றன. வாகனங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் போதிய இடவசதிகள் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டை ஆய்வு செய்து, இடநெருக்கடியை தீர்க்க வேண்டும்’’ என்றார்.

Tags : Nellai Exhibition Grounds ,traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...