×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பட்டப்பகலில் லாரி டிரைவர் சரமாரி வெட்டி படுகொலைகூலிப்படையினர் வெறிச்செயல்

திருவெண்ணெய்நல்லூர், நவ. 1: திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக்கில் சென்ற லாரி டிரைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நண்பா மகன் கலீல் (42). இவர் சவுதி, கத்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த போது கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் சவுதிக்கு செல்லவில்லை. சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி தில்ஷாத் (38) என்ற மனைவியும், பிர்தௌஸ் (11), இர்பான் (7) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர்.  

கலீல் தந்தைக்கு 2 மனைவி. இதில் முதல் மனைவி மகன் தாவுத் என்பவரின் பெயரில் அவரின் சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆலோசனைகள் கொடுத்தவர் அதே ஊரை சேர்ந்த பைரோஸ் என்று கூறப்படுகிறது. இதையறிந்த கலீல் சகோதரன் கரீம் நேற்று முன்தினம் மாலை பைரோஸிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவரும் ஆபாசமாக திட்டி, தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து பைரோஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரீமை போலீசார் விசாரணை செய்ய காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை விசாரணைக்காக கலீல் மற்றும் அவரின் சித்தி அமீனா (55) ஆகியோர் காவல்நிலையத்துக்கு சென்று விசாரணையை முடித்துக்கொண்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். கடலூர்-சித்தூர் சாலையில் தி.எடப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் 3 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், அமீனாவிடம் பைக்கின் பின்பக்க சக்கரத்தில் சேலை சிக்குவதாக கூறியுள்ளனர். அதை கேட்ட அவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்துள்ளனர்.

உடனே கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் கலீலை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து அவருடன் சென்ற அவரின் சித்தி செல்போனில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற அவரது உறவினர்கள் கலீலை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கலீலின் மனைவி திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து சொத்தில் பங்கு கிடைக்காத காரணத்தால் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் நடந்த 2வது கொலை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலீலின் தந்தை நண்பா, பைரோஸ் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lorry driver ,mob ,Thiruvennallur ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி...