×

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் திடீர் முற்றுகை வாக்குவாதம்-பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர், நவ. 1:  விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 30 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியினர் கரும்பு மற்றும் நெல் பயிர் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சார்பில் ஊரக வளர்ச்சி துறையில் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த காளி மகன் அண்ணாமலை (40, சிபிஐ கட்சி கிளை செயலாளர்) வட்டாட்சியரிடம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்தார். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். இதுபற்றி தகவலறிந்த ஊர் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காமல், தற்போது ஒருநபர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதுடன், தற்போது அனைவரும் பயிர் செய்துள்ளதாகவும் பயிர்களை அறுவடை செய்த பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு மணி நேர வாக்குவாதத்துக்கு பிறகு ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு கால அவகாசம் வழங்கினர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : development officer ,siege ,Thiruvennallur ,
× RELATED முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!