×

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி 4 பேர் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம், நவ. 1: திண்டிவனம் அருகே நேற்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அருப்புக்கோட்டையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த 9 பேர் நேற்று முன்தினம் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு காரில் சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் மீண்டும் அருப்புக்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த காரை சேகர் மகன் கவுதம் (28) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்னை மணலியில் இருந்து ராக்கெட் உதிரிபாகம் ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் கார் மோதியது. மோதிய வேகத்தில் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. ஏதோ சத்தம் கேட்டதால் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்தார். அப்போது அதன் அடியில் கார் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்தது. காரின் இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் அலறி துடித்தனர்.

இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், மயிலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, நெடுஞ்சாலை ேராந்து போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கவுதம் (28), காரில் வந்த முருகேசன் மனைவி சுப்புலட்சுமி (50), வேல்பாண்டி (37) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் முருகேசன் (55), முத்து இருளப்பாண்டியன் மனைவி பேச்சியம்மாள் (40), சேகர் மனைவி ஜெயந்தி (60), வேல்பாண்டி மனைவி லட்சுமிபிரியா (27), இவரது மகள்கள் கமலினி (7), அருள்சுனை யாழினி (5) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பேச்சியம்மாள் மற்றும் ஜெயந்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் வந்தவாசியை சேர்ந்த சீனுவாசன் (35) கைது செய்யப்பட்டார். லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு மயிலம் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : car-truck collision ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...