×

குமரிக்கு வயது 64 போராட்டங்கள் தொடர்கதையாகிறது

நாகர்கோவில், நவ.1: திருவிதாங்கூர் -  கொச்சி சமஸ்தானத்தில் இருந்து தமிழக தெற்கு எல்லையான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களும் பிரிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி உதயமாகி தாய் தமிழகத்துடன் இணைந்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னரே குமரி மாவட்டம் உதயம் சாத்தியமானது. இன்றைய குமரி மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகியவையும் சேர்த்து ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க கோரி நாகர்கோவிலில் திருவிதாங்கூர்  தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக சாம் நதானியேல் பொறுப்பேற்றார். அதன் பின்னர் மார்ஷல் நேசமணி இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். 1948ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்த இயக்கம் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அமைச்சரவையிலும், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு தனி பிரதிநிதித்துவம் கிடைத்தது. சிதம்பரநாதன் நாடார் வருவாய்துறை அமைச்சர் ஆனார்.

ஆனால் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்த வேளையில் அதனை ஒடுக்க அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இதனை கண்டித்து சிதம்பரநாதன் நாடார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1954ல் இணைப்பு போராட்டம் தீவிரமாக வெடித்தது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதனை மீறிய மார்ஷல் நேசமணி, ஏ.ஏ.ரசாக், சிதம்பரநாதன் நாடார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு குஞ்சன்நாடார் தளபதியாக செயல்பட்டார். புதுக்கடை, மார்த்தாண்டம், மூலச்சல் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடுகளில் 11 பேர் உயிரிழந்தனர். போராட்டகாரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் மார்ஷல் நேசமணி உச்சநீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் ஐகோர்ட்டில் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றார். போராட்டம் தொடர்ந்த வேளையில் பணிந்த அரசு, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை பகுதிகளை 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. குமரி மாவட்டம் உதயமானது.

ஆண்டுகள் 64 கடந்துவிட்டது. குமரி மாவட்டம் நிறையவே மாறிவிட்டது. எல்லா மாற்றங்களும் நன்மையைத்தரும் வகையில் இல்லை. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் இருந்த மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரம் குளங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 50 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் நெல் சாகுபடி நடைபெற்று வந்த இடங்களில் 5 ஆயிரம் ஹெக்டர் மட்டுமே நெல் சாகுபடி நடைபெறுகிறது. எல்லோர் வீடுகளிலும் அறுவடை செய்து நெல் குவித்து வைத்திருந்த காலம் மாறிவிட்டது. 100 ஆண்டுகளாகியும் தூர்வாரப்படாத பேச்சிப்பாறை அணை. நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீருக்கு மாற்றுவழி கண்டுபிடிக்காத அவலம் தொடர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளும் கட்டுப்பாடின்றி உடைக்கப்பட்டதால் இன்று மாவட்ட மக்கள் சொந்த தேவைக்கு பக்கத்து மாவட்டத்தில் மணலுக்காகவும், கற்களுக்காகவும் காத்திருக்க வேண்டிய அவலம்.

குளச்சலில் வர்த்தக துறைமுகம், நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டி, தொழில்நுட்ப பூங்கா, சாய் சப் சென்டர், சாமித்தோப்பில் விமான நிலையம், 4 வழி சாலை, சித்த மருத்துவ பல்கலைக்கழகம், விவசாய கல்லூரி, சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், அதிநவீன அறிவியல் மையம், ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு, நெய்யாறு இடதுரை கால்வாயில் தண்ணீர், உலக்கை அருவி குடிநீர் திட்டம், ரப்பர் பூங்கா, நாகர்கோவிலில் ரிங் ரோடு, நாகர்கோவில் ரயில்வே கோட்டம், பார்வதிபுரம் ரயில் நிலையம், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் என்று அரசியல் கட்சியினரின் தேர்தல் கால வாக்குறுதிகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் இயல்பாக கிடைக்கின்ற ரப்பர், மீன், காய்கறிகள், பழங்கள், பூக்கள், தேங்காய் இவற்றை சார்ந்த வளர்ச்சியும், தொழில்களும் இன்றைய தேவைகள் ஆகிறது. ஆனால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவே மக்கள் பல கட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர். தேவைகளை நிறைவேற்ற போராட்டமே தீர்வு என்ற நிலை தொடர்கிறது. தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறும் நாளே நிஜமான கொண்டாட்ட நாளாகும்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...