×

தனியார் சிட்பண்ட் மோசடி விவகாரம் பங்குதாரர் வீட்டை முற்றுகையிட்டு காத்திருப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் உத்தமபாளையத்தில் பரபரப்பு

உத்தமபாளையம், நவ.1: உத்தமபாளையம் குருக்கள் தெருவில் தனியார் சிட்பண்ட் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் பல கோடிக்கும் மேல் டெபாசிட் செய்தனர். தவிர ஏலச்சீட்டு, மாதந்தோறும் வசூலிக்கப்படும் சேமிப்பு சீட்டு என பல கோடிகளை தாண்டி உள்ளது. மாதந்தோறும் வட்டி சரியாக வழங்கப்பட்ட நிலையில் 3 மாதத்திற்கு முன்பு இதன் பங்குதாரர்களில் ஒருவரான அஜீஸ்கான் திடீரென இறந்தார்.
இதனால் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவில்லை. மற்றொரு பங்குதாரரான ஜமாலிடம், தங்கள் முதலீடு செய்த பணத்தை தருமாறுத செப்டம்பர் மாதம் நேரில் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். ஆனால், தன்னால் தர முடியாது என அவர் கைவிரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வழக்கு திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை செய்து சிட்பண்ட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 300க்கும் மேற்பட்ேடார் அஜீஸ்கான் வீட்டின் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சமையல் செய்து நாங்கள், பணத்தை பெறாமல் செல்லமாட்டோம் என கூறி வீட்டு வாசலில் அமர்ந்தனர். உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, டிஎஸ்பி சின்னகண்ணு தலைமையில் வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நவ. 2ம் தேதி உத்தமபாளையத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதில் டெபாசிட் செய்தவர்கள், சீட்டு போட்டவர்கள் என பாதிக்கப்பட்டவர்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாராக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனர்.

Tags : bond fraud scandal ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...