×
Saravana Stores

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவடு மண் கொள்ளை குறித்து வக்கீல் கமிஷன் நேரில் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம், நவ.1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் கோட்டைக்கரை ஆற்று பகுதியை ஒட்டிய பகுதியில் பட்டா இடங்களில் உபரி சவடு மண் அள்ள அனுமதி பெற்றுக் கொண்டு அருகில் உள்ள கோட்டைகரை ஆற்றுப்பகுதியிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். மேலும் சவடு மண் அள்ள அனுமதித்த அளவை விட  கூடுதல் ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதால், கனிம வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சவடு மண் அள்ள அனுமதி சீட்டு வழங்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, பாரனூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், வக்கீல் கணபதி சுப்பிரமணியனை வக்கீல் கமிஷனராக நியமித்ததுடன், அவர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளை குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று பாரனூர் பகுதியில் வக்கீல் கமிஷனர் சவடு மண் அள்ளப்பட்ட குவாரி இடத்தையும், அருகில் உள்ள கோட்டைகரை ஆற்றுப்பகுதியையும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சவடு மண் அள்ளப்பட்டிருந்த இடம், மணல் திருடப்பட்ட ஆற்று பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பிரபா, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர், கனிமவள துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Advocate Commission ,RS Mangalam ,
× RELATED ஆனந்தூர் பெரிய ஊரணியில் இறந்து மிதந்த மீன்களை அகற்றும் பணி தீவிரம்