×

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

வேதாரண்யம், நவ.1: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. சிறப்புவாய்ந்த கோவிலில் ஐப்பசிமாதம் பவுர்ணமிக்கு அடுத்த பரணி நட்சத்திரத் தினத்தன்று (31ம் தேதி) நேற்று காலை சிவலிங்கத்திற்கு சிறப்புஅபிஷேகம் செய்து, சாதம்வடித்து சிவலிங்கம் முழுவதும் அந்த சாதத்தால் அலங்காரம் செய்து காய்கறிகள், வடை, புட்டு, மோதகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில்கதவுதிறக்கப்பட்டு, பக்தர்கள்சுவாமிதரிசனம் செய்தனர். மாலை சாயரட்சைகாலத்தில் சிவலிங்கத்தின்மேல் சாத்தப்பட்டசோறு (அன்னம்) களையப்பட்டு அதில் ஒரு பகுதியை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதிக்கடல் என்னும் வேதநதியில் கரைத்தனர். பின்பு சாயரட்சை தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு சிவலிங்கத்தின் மேல்சாத்தப்பட்ட சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கீழ்வேளூர்: கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை உடனுரை அட்சயலிங்க சுவாமி கோயில், கீழ்வேளூரை அடுத்த வலிவலம் மழையொன் கன்னி அம்பிகா சமேத மணத்துணை நாதருக்கு கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னஅபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அரிசியால் தயார் செய்யப்பட்ட அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி: சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பின் கோயில் திறக்கப்பட்ட நிலையில் தெற்கு கோபுர வாசல் மட்டும் சாத்தப்பட்டு இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு கோபுர வாசல் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது கிழக்கு கோபுர வாசல், வடக்கு கோபுர வாசல் மட்டும் திறந்து இருக்கிறது.நேற்று பவுர்ணமி அன்னாபிஷேகம் நடந்த வேளையில் கோயிலின் தெற்கு கோபுர வாசல் திறக்காமல் சாத்தப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெரிசலில் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tags : Annabhishekam ,temples ,Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு