×

தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உயர்மின் கோபுரம் திட்டம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

தாராபுரம். நவ.1:  தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உயர் மின் கோபுரம் திட்டம் தொடர்பாக விவசாயிகள் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததால் உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.
 தாராபுரம் அருகே உயர்மின் கோபுரத்தின் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு பிரதான சாலையின் ஓரங்களில் புதிய வழித்தடம் அமைத்து அதில் கேபிள்களை பறித்து கொண்டு செல்ல வலியுறுத்தியும்,
உயர்மின் கோபுரங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு விசாரணை அழைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதை கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் தாராபுரத்தை அடுத்த சி.ஆலாம்பாளையத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமையில், சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

காத்திருப்புப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தாராபுரம் சப்-கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி நேற்று தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், நில எடுப்பு பிரிவு, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அதிகாரிகள், கலந்துகொண்ட பேச்சுவார்த்தை சப் கலெக்டர்  பவன் குமார் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தையின்போது ‘‘உயர் மின் கோபுரத்தை தவிர்த்து சாலையோரம் புதை வழி தடம் அமைத்து அவற்றின் வழியாக மின் கேபிள்களை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்ட கலெக்டர்கள் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர்  மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை விசாரணைக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணை அழைப்பாணையை மாவட்ட கலெக்டர்  திரும்பப்பெற வேண்டும் இல்லை என்றால் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறும் என்றும், இதேபோல் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் கலந்துபேசி முடிவினை தெரிவிப்பதாக சப் -கலெக்டர் பவன்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சப்-கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து நேற்று மாலை 5 மணி வரை விவசாயிகளுக்கு சாதகமான பதில் எதுவும் வழங்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் மீது புகார் எழுப்பிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஏற்கனவே பவர் கிரிட் நிறுவனத்தாலும் மின் தொடரமைப்பு கழகத்தினரால் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களுக்கு இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

ஆனால் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மின் பாதை அமைப்பதற்கு ரூ.9 கோடி செலவாகும் இதில் நான்கு கோடி ரூபாயை விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கி வருவதாகவும் தவறான தகவல்களை கூறியுள்ளார். விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் பொய்யான தகவல்களை கூறி வரும் மின்சாரத் துறை அமைச்சருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பதில் கூறுவோம் என்று ஆவேசத்துடன் சப்-கலெக்டர்  முன்னிலையில் கூறினர்.

Tags : Negotiations ,office ,Tarapuram ,
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...