×

குரங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் கடும் நடவடிக்கை

வால்பாறை, நவ. 1: குரங்குகளின் இனப்பெருக்க காலம் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உணவு பண்டங்களை வழங்கி செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அரிய வன விலங்கான சிங்கவால் குரங்கு வால்பாறை பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது. உலக அளவில் மிகக் குறைந்த அளவே உள்ள சிங்கவால் குரங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேங்களில் சில இடங்களில் அதிகம் காணப்படுவதால் பேணி காக்கப்பட்டு வருகிறது. சிங்கம் முகத் தோற்றத்துடன், வாலும் சிங்கம்போல் இருப்பதால் இந்த குரங்கு சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது. எனவே வல்பாறை வரும் சுற்றுலாப்பயணிகள் குரங்குகளுடன் சாலையோரங்களில் செல்பி எடுக்க முற்படுகின்றனர். இதை தடுக்க வனக் காவலர்கள் பணியில் உள்ளபோதும், பலர் அத்துமீறுகின்றனர்

 இந்நிலையில் குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை என்பதால் இக்குரங்குகள் படு சுட்டியாக காணப்படுகிறது. மிகுந்த உயரத்தில் இருந்து குதிக்கும் தன்மை கொண்டுள்ள இக்குரங்குகளின் கர்ப்ப காலம் 170 நாட்கள் ஆகும். ஒரு கூட்டத்தில் 14 - 80 குரங்கு வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப் வனச்சரகத்திலும் சிங்கவால் குரங்குகள் உள்ளது. வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்கு கூட்டங்கள் அதிகளவில் உள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் உள்ளதால் அதிகளவிலான வாகனங்கள் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வரும் வழியில் வாகனங்களை நிறுத்தி திண்பண்டங்கள் கொடுத்து செல்பி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே பல குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதை தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக உணவு கொடுப்பதையும், செல்பி எடுப்பதையும் தடைசெய்துள்ளனர். மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...