×

கூத்தாநல்லூரில் முன்விரோதம் காரணமாக பள்ளிவாசல் நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மன்னார்குடி, அக்.30: கூத்தாநல்லூரில் குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பள்ளிவாசல் நிர்வாகியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் 2 நபர்களை தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபியுதீன் (57). இவர் பெரியபள்ளி வாசல் நிர்வாகத்தின் துணை செயலாளராகவும், அல் அமான் இளைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.இவருக்கும் இவரின் மைத்துனரான முகமதுசலீம் (65) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகமது ரபியுதீன் நேற்றுமுன்தினம் தனது சொந்த வேலை காரணமாக கூத்தாநல்லூர் காவல்நிலையத்திற்கு வந்து விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகில் பின்னால் வேறொரு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரபியுதீன் மீது மோதினர். இதில் நிலை தடுமாறி கீழ விழுந்த அவரை சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

பலத்த காயமடைந்த ரபியுதீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் ரபியுதீன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனந்த கிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடும்ப பிரச்சனை தொடர்பாக இருந்து வந்த முன்விரோதம் காரணமாக முகமதுசலீமின் உறவினரான மஜ்ஜிதீயா தெருவை சேர்ந்த அனஸ் மைதீன் (55) என்பவர் கூலிப்படையினர் சிலரோடு சேர்ந்து ரபியுதீனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அனஸ்மைதீனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர் புடைய இரண்டு நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : mosque administrator ,Koothanallur ,
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா